Monday, March 5, 2012

தோனி விமர்சனம்

மனைவியை இழந்து மகன், மகளோடு பட்ஜெட் வாழ்க்கை நடத்தும் பிரகாஷ்ராஜ், ரிஜிஸ்தர் ஆபீஸ் கிளர்க். சம்பளம் போதாமல் ஊறுகாய் வியாபாரம், கடன் என்று காலம் கழிக்கிறார். அவருக்கு, மகன் எம்பிஏ படித்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது கனவு. ஆனால், மகனுக்கு கிரிக்கெட்டராக வேண்டும் என்பது லட்சியம். படிப்பு வரவில்லை. கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் பிரகாஷ்ராஜ், மகனை வேகமாக அடிக்க, தலையில் காயமடைந்து கோமா நிலைக்குச் செல்கிறான். பிறகு மகனை, தான் அடிக்கவில்லை, இந்த சமூகம், கல்வி முறை அடிக்க வைத்தது என்பதை உணர்கிறார். தனிமனிதனாக தன் மகனை காப்பாற்றவும், கல்விமுறையை மாற்றவும் போராடுகிறார். அதில் வெற்றி பெற்றாரா என்பது கதை.

காய்கறிகாரரிடம் பேரம் பேசி பொருள் வாங்குவதும், ஆபீஸ் வேலையாக போகும்போது சொந்த வேலையையும் சேர்த்து செய்வதும், பார்க்கிறவர்களிடமெல்லாம் ஊறுகாய் விற்பதுமாக சராசரி மனிதனாக வாழ்ந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். மகனுக்காக அவன் படிக்கும் பள்ளியில் கெஞ்சிக்கூத்தாடுவதும், அவனுக்காக ஆசிரியர்களிடம் கெஞ்சி டியூசன் சேர்ப்பதும், அப்படியும் படிக்காத மகனை விரக்தியில் அடிப்பதுமாக, பக்கத்து வீட்டு மனிதர்களை பிரதிபலிக்கிறார். பிரகாஷ்ராஜுக்கு ஈடுகொடுத்து நடித்திருக்கிறார் மாஸ்டர் ஆகாஷ். ‘எனக்கு மேக்ஸ் வரலைப்பா. கிரிக்கெட்தான் பிடிக்குது’ என்று கெஞ்சும்போதும், கிரிக்கெட் புள்ளி விவரங்களை அள்ளி வீசும்போதும் அபாரம்.

அபார்ட்மென்டில் இருந்து கொண்டு பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக ராதிகா ஆப்தே. ‘புருஷன் ஓடிட்டான். ரெண்டு குழந்தைங்க. வயதான அப்பா அம்மா. எனக்கு வேற வழி தெரியல’ என்று தன் கேரக்டருக்கு விளக்கம் கொடுப்பதும் அதுவரை வெறுத்து வந்த பிரகாஷ்ராஜ் அவளின் மனிதாபிமானத்தை நினைத்து உருகும் காட்சியும் நெகிழ வைக்கிறது. ‘ஒரு கிளாஸ்ல, 40 புள்ளைங்க இருந்தா, அதுல 10 பேர் நல்லா படிப்பாங்க. மீதி 30 புள்ளைங்களும் மக்குன்னு எப்படி முடிவு பண்ணுறீங்க? அவங்ககிட்ட வேற ஏதோ திறமை இருக்கு. அதை கண்டுபிடிக்கணும், பெத்தவங்க, பள்ளி, அரசாங்கம் கண்டுபிடிக்கணும்’- என்பது உட்பட படம் முழுக்கத் தெறிக்கும் வசனங்கள் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. பிரம்மச்சாரி ரிஜிஸ்தார் பிரம்மானந்தம், பிரகாஷ்ராஜ் மகள் ஸ்ரீஜிதா, கோச் நாசர் என அனைவருமே தங்கள் பங்கை சரியாகச் செய்கிறார்கள்.

இளையராஜாவின் இசை கதையின் வலுவையும், காட்சியின் வலியையும் உணர வைக்கிறது. கே.வி.குகனின் ஒளிப்பதிவு கச்சிதம். சமுதாயத்துக்கு தேவையான கருத்தோடு இயக்குனர் பயணத்தை துவக்கி இருக்கும் பிரகாஷ் ராஜின் முயற்சி பாராட்டுக்குரியது. டி.வி நிகழ்ச்சியிலேயே பிரகாஷ்ராஜ் ஹீரோவாவது, கிளைமாக்சில் முதல்வரை சந்திக்க எடுக்கும் முயற்சி, கந்துவட்டிகாரன் நெகிழ்ந்து திருந்துவது எல்லாமே டிராமா ஸ்டைல். இப்படி குறைகள் இருந்தாலும் படத்தின் நோக்கம் உயர்வானது.

காதலில் சொதப்புவது எப்படி?

அடிக்கடி முட்டிக்கொள்ளும் லட்சோப லட்ச காதலர்களின் சொதப்பல்களை எட்டு நிமிட குறும்படமாக எடுத்த இயக்குனர், அதை இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் இழுத்து அடைத்திருக்கிறார் கலகலப்பாக. அமலா பாலும் சித்தார்த்தும் லவ்வர்ஸ். ‘தங்கள் லவ் எப்படி ஸ்டார்ட் ஆச்சு?’ என்று கொடுக்கிற பேட்டியில் ஆரம்பிக்கிறது படம்.

'கேன்டீன்ல சந்திச்சோம். அப்ப இவங்க ரொம்ப சப்பியா இருப்பாங்க?'
'நான் அப்ப சப்பியா இல்ல'
'இல்ல இருந்தே. அதான் அப்ப உனக்கு அழகே'
'இப்ப நான் அழகா இல்லையா?'
'இல்லை, அது...'

-தொடர்கிற சண்டையில் சித்தார்த்தின் நெற்றியில் விழுந்து உடைகிறது கண்ணாடி கிளாஸ். இப்படி போகிற கதையில் ஏராளமான ஈகோவையும் நண்பர்களின் டமார் காதலையும் மிக்ஸ் பண்ணி, திகட்ட திகட்ட இளமை கதை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி மோகன். இறுதியில், 'சொதப்பாத காதல், காதலே இல்லைப்பா' என்கிற மெசேஜும். துறுதுறு மாணவன் கேரக்டருக்கு அம்சமாய் பொருந்துகிறார் சித்தார்த். ஆடியன்ஸிடம் சொல்லிக்கொண்டு கதையை நகர்ந்தும் அவர், அமலாவிடம் வழிவதாகட்டும், போனை வீட்டுக்குள் வைத்துவிட்டு அமலாவின் போன் காலுக்காகத் தவிப்பதாகட்டும் கிளைமாக்ஸில் உருகுவதாகட்டும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

மாணவி கேரக்டரில் அமலா. ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று சீரியஸாகி, சித்தார்த்துடன் சண்டைபோடும் இடங்கள் க்யூட். ஈகோவில் இருவரும் பேசாமல் இருக்க, தோழி சொன்னாள் என்று போன் பண்ணி, 'ஸாரி, அன்னைக்கு உன்னை சரியா புரிஞ்சுக்காம...' என்று சித்தார்த் சொல்ல, 'பரவாயில்ல. இப்பவாவது உன் தப்பை உணர்ந்தியே' என்று அமலா பேச, 'தப்பா...நான் என்ன தப்பு பண்ணினேன் உணர்றதுக்கு...' என்று சித்து சிடுசிடுக்க, தொடரும் சண்டையில் தியேட்டரில் அள்ளுகிறது அப்ளாஸ். அப்பாவும் அம்மாவும் டைவர்ஸுக்கு அப்ளை பண்ண, 'இங்க நான் ஒருத்தி இருக்கிறதையே மறந்துடுவீங்களா?' என்று கொதிக்கும்போது கலங்கவும் வைக்கிறார்.

அமலாவின் அப்பா சுரேஷ். மகளிடமே, அம்மா சுரேகா வாணிக்கான காதல் கடிதத்தை கொடுப்பது, பிறகு மனைவியுடன் டேட்டிங் செல்வது, கோயில் பின்னணியில் வரும் கமல்ஹாசனின் 'வளையோசை கல கலகலவென' பாடல்காட்சி என இதையும் காதல் எபிசோடாக்கியிருப்பது சுவாரஸ்யம். ஆனாலும் திணிக்கப்பட்ட காட்சியாகவே இருக்கிறது. சித்தார்த்தின் அப்பாவாக ரவி ராகவேந்தர். 'டேய், பேஸ்புக்ல யார்ரா, உங்கூட ஒரு பொண்ணு போட்டோ இருக்கு' என்று கேட்க, 'பிரண்ட்பா' என சொல்லும் சித்தார்த்திடம், 'பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கேன். அக்சப்ட் பண்ணு' என்பதும், துணிக்கடையில் விவகாரமான இடத்தில் அமலாவைப் பார்த்து பேச, அவரை சித்தார்த்தின் அம்மா சிவரஞ்சனி தள்ளிக்கொண்டு வருவதும் கலவர காமெடி. நண்பர்களாக வரும் விக்னேஷின் 'அண்ணா' காதலும் அடிக்கடி அட்வைஸ் பண்ணும் அர்ஜுனனின் அடிவாங்கும் லவ்வும் காமெடி ஏரியாவை அதிகப்படுத்துகின்றன.

'பாசத்தையும் சரி வெறுப்பையும் சரி, ஒரு பொண்ணுகாட்டுற மாதிரி வேற யாரும் காட்ட முடியாது', 'பொண்ணுங்க பெயின்டிங் மாதிரி. ஒரு ரூம்ல எங்கயிருந்து பார்த்தாலும் அந்த பெயின்டிங் நம்மை பார்க்கிற மாதிரிதான் இருக்கும். அதுமாதிரிதான் பொண்ணுங்களும். ஏன்னா, நமக்கு அதுதான் வேணும்' என்கிற ரீதியில் படம் முழுக்க வரும் வசனங்கள் நச் ப்ளஸ் டச். தமனின் இசையில், 'பார்வதி...' பாடல் ஒகே. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் லவ் துள்ளல்.

கேமராவை அடிக்கடி பார்த்து, 'இந்த பொண்ணுங்க இருக்காங்களே...' என்று சித்தார்த் அடிக்கும் லெக்சர் சலிப்பு. படம் முழுவதும் எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பதும் எந்தக் காட்சியும் மனதில் நிற்காததும் சொதப்பலாக இருந்தாலும் இந்த ரசனையான சொதப்பலை ரசிக்கலாம்.

அம்புலி 3D விமர்சனம்

1980-ம் ஆண்டு கிராமம் ஒன்றில் நடந்த திகில் கதை. அந்தக் கிராமத்து பெண் பொன்னி. இவளது மூத்த மகன் செங்கோடன். இரண்டாவதாக சந்திர கிரகணத்தின்போது ஓரு குழந்தையை பெற்றெடுக்கிறாள். அது மிருகமும், மனிதனும் இணைந்த விநோத தோற்றத்தில் பிறக்கிறது. தாயின் வயிற்றிலிருந்து வந்த உடனேயே பிரசவம் பார்த்த மருத்துவச்சியை கொல்கிறது. கிராம மக்கள் அதை கொல்ல முயலும்போது காட்டுக்குள் ஓடுகிறது. தாய் தற்கொலை செய்து கொள்கிறாள். 150 ஆண்டுகள் வாழும் சக்தி படைத்த அந்த அம்புலி, காட்டுக்குள் மறைந்து மனிதர்களை வேட்டையாடுகிறது.

அருகில் இருக்கும் கல்லூரி மாணவன் அஜெய்யின் காதலி சனம், அந்தக் கிராமத்தில் வசிக்கிறாள். அவளைப் பார்க்க காட்டு வழியாக செல்லும் அஜெய்யும், அவனது நண்பன் ஸ்ரீஜித்தும் அம்புலியால் துரத்தப்படுகிறார்கள். அந்த அம்புலியை கண்டுபிடித்து அழிக்க, அது பற்றி ஆராய்கிறார்கள். அதே காட்டுக்குள் அம்புலியின் அண்ணன் செங்கோடன் (பார்த்திபன்) தனியாக வாழ்கிறான். அவன், கல்லூரி முதல்வரை கொன்று விட்டு சிறைதண்டனை அனுபவித்து திரும்பியவன் என்று விரியும் கதை ஏகப்பட்ட முடிச்சுகளுடன் கிளைமாக்ஸை நெருங்கிறது. படத்தின் ஹீரோ அஜெய்யும், நண்பன் ஸ்ரீஜித்தும் அம்புலியை தேடிச் செல்வது சுவாரஸ்யம். தம்பி ராமையாவுடன் சேர்ந்து காமெடியும் செய்கிறார்கள்.

ஹீரோயின் சனம் காதலிக்கவும், பாடவும் செய்கிறார். பார்த்திபன் மிரட்டுகிறார், திகிலூட்டுகிறார். கிளைமாக்சில் அம்புலியோடு ஆக்ரோஷமாக சண்டையும் போடுகிறார். அம்புலியாக நடித்திருக்கும் கோகுலின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது. நாத்திகராக வரும் ஜெகன்னாத் மக்களை உசுப்பேற்றுகிறார். சோளக்கொல்லைக் காடு, காட்டுப் பங்களா, பாழடைந்த கோவில் என ஆர்ட் டைரக்டர் ரெமியனின் உருவாக்கம் அருமை. அதை கதைக்கு ஏற்றபடி திகிலூட்டும் விதத்தில் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி. கதையோட்டத்தின் இடையே 3டி எபெக்ட்டை அவ்வப்போது உணர வைக்கிறார். நால்வர் கூட்டணியின் பின்னணி இசைதான் படத்துக்கு உயிர்.

மூடநம்பிக்கையை சாடிய இயக்குனர்கள், அதீத கற்பனையாக கதை சொல்லியிருப்பது முரண்பாடு. பெரும்பகுதி படம் சோளக்காட்டுக்குள்ளேயே சுற்றி வருவதால் அவ்வப்போது அலுப்பு தட்டுவதை தவிர்க்க முடியவில்லை. பார்த்திபன் நல்லவரா கெட்டவரா என்பதில் பெரிய குழப்பம். நரமாமிசம் சாப்பிடும் மிருகமான அம்புலி பார்த்திபனை மட்டும் விட்டு வைப்பது எதனால்? என்கிற கேள்விகள் எழுந்தாலும் அம்புலியை ரசிக்கலாம்.